Men need to know this ஆண்கள் அவசியம் இதை தெரிஞ்சுக்கணும்
அடிவயிற்றில் சிறுநீர்ப் பைக்குக் கீழே, சிறுநீர்ப் புறவழி தொடங்குகிற இடத்தில், சிறுநீர்ப் பையின் கழுத்தைச் சுற்றித் தசையாலான சுரப்பி ஒன்று உள்ளது. அதற்குப் புராஸ்டேட் சுரப்பி என்று பெயர். அதிகபட்சமாக 16 கிராம் எடையே உள்ள இச்சுரப்பி ஆண்களுக்கு மட்டுமே உள்ளது.
இது முழுக்க முழுக்க ஒரு பாலியல் சுரப்பியாகும். இளமைப் பருவம் வந்தவுடன் இதன் முக்கியத்துவம் அதிகரித்து விடுகிறது. இதில் புரதம் மற்றும் என்சைம்கள் கலந்த திரவம் சுரக்கிறது. இது விந்தணுவுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. விந்தணுவின் அளவு, இயக்கம் ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. பாலுறவு தொடர்பான உணர்ச்சிகளை ஊக்குவிப்பதும், பாலுறவின்போது பெண்ணுறுப்புக்கு விந்துவைச் சுமந்து செல்வதும் இந்தத் திரவம்தான். ஆகவே புராஸ்டேட் சுரப்பிக்கு ‘ஆண்மை சுரப்பி’ என்று ஒரு காரணப் பெயரும் உண்டு.
பொதுவாக, வாலிபப் பருவத்தில் இது ஆரோக்கியமாகவே இருக்கும். வயது ஆக ஆக இது வீக்கமடையும். ‘பினைன் புராஸ்டேடிக் ஹைப்பர்பிளேசியா’ (Benign prostatic hyperplasia - BPH) என்று இதற்குப் பெயர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வீக்கம் ஏற்படுவது மிகச் சாதாரணமானதுதான். முதுமையில் தலைமுடி நரைப்பதைப் போல இதுவும் முதுமையின் ஓர் அடையாளம் எனக் கருதப்பட்டாலும், பலருக்கு இது ஒரு நோயாகத் தலையிடும்போது, இதைப் பிரச்சினை தரும் உறுப்பாகக் கருதுவதுண்டு. முக்கியமாக, இந்தச் சுரப்பி வீக்கமடைந்து சிறுநீர்ப் பையை அழுத்திச் சிறுநீரை வெளியேற்றுவதில் பிரச்சினையை உருவாக்கும்.